பாரடே அலைகள் (Faraday waves) அல்லது பாரடே சிற்றலைகள் (Faraday ripples) எனப்படுபவை அதிர்வுறும் கொள்கலனில் உள்ள திரவங்கள் உருவாக்கும் நேரிலா நிலையான அலைகள் ஆகும். மைக்கேல் பரடேயின் பெயரால் இவ்வலைகள் வழங்கப்படுகின்றன. அதிர்வுறும் திரவங்களின் அதிர்வெண் தெவிட்டு நிலையை விட அதிகாிக்கும் போது தட்டையாக இருக்கும் நிலையான திரவத்தின் (hydrostatic) மேற்பரப்பு நிலையற்றதாகிறது. இது பாரடேயின் நிலையற்றதன்மை எனப்படுகிறது. 1831 ஆம் ஆண்டில் அரச கழகத்தின் மெய்யியல் இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் பரடே இவ்வலைகள் பற்றி முதற்தடவையாகக் குறிப்பிட்டார். செங்குத்தாக அதிர்வுறும் ஒரு உந்து தண்டை திரவத்தின் மேற்பரப்பில் வைக்கும் போது, அதிர்வுறு அதிர்வெண்ணில் பாதி அதிர்வெண் கொண்ட நிலையலைகள் உருவாக்கப்படுகிறது. இது பாரடேயின் நிலையற்றதன்மை கொள்கையால் விளக்கப்படுகிறது.
சமமற்ற ஒத்ததிர்வு கொள்கை அடிப்படையில் அலை உருவாகிறது. இவ்வலைகள் கோடுகளாகவும், சீராக அமைக்கப்பட்ட அறுகோண அமைப்பிலும் அல்லது சதுரங்களாகவும் அல்லது பகுதி படிக அமைப்பிலும் வடிவம் பெறுகின்றன. அதிர்வுறும் கண்ணாடி குவளையில் வைக்கப்பட்டுள்ள திரவத்தின் பரப்பில் மெல்லிய கோடுகளாக பாரடே அலைகள் உருவாகின்றன. இசையெழுப்பும் பாத்திரங்களில் உருவாகும் ஊற்று போன்ற அமைப்பையும் விளக்க பாரடே அலைகள் உதவுகின்றன. பாரடே அலைகளின் அலைநீளம் டி பிராலி அலைகளை ஒத்த அலைநீளங்களைப் பெற்றுள்ளன.
பாய்மப் பொருள், திண்மப் பொருள், உயிருள்ளவை ஆகியவற்றின் மிகச் சிறிய அளவிலான திரவ அடிப்படையிலான மாதிரிகளைப் பெற பாரடே அலைகள் உதவுகிறது. திட அடிப்படையிலான மாதிரிகளை விட திரவ அடிப்படையிலான மாதிரிகள் சமச்சீரான மற்றும் சம கால அளவிலான அலைத் தோற்றங்களை உருவாக்க உதவுகின்றன. முதலைகள் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ள பாரடே அலை வடிவங்களைப் பயன்படுத்துகின்றன.